'இந்தியா நம்பர் 1 அணியாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு' - இந்திய ஆக்கி அணி புதிய பயிற்சியாளர் பேட்டி

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இந்திய ஆக்கி அணியின் முன்னுரிமையாக உள்ளது என கிரேக் புல்டான் தெரிவித்தார்.

Update: 2023-05-16 20:09 GMT

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணியின் புதிய பயிற்சியாளரான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் புல்டான் நேற்று காணொலி மூலம் அளித்த பேட்டியில், 'ஆசிய மண்டலத்தில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் இலக்குகளில் முதன்மையானதாகும். அத்துடன் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன் பதக்க மேடையை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

அணியில் போதுமான அனுபவத்தை உருவாக்கி, ஒவ்வொரு வீரருக்கும் பொருந்தக்கூடிய ஆட்ட திட்டத்தை வைத்து இருந்தால் நீங்கள் சர்வதேச போட்டியில் இறுதிசுற்றுக்குள் நுழைவதுடன் பதக்கத்தையும் வெல்ல முடியும். இந்த ஆண்டு இறுதியில் அரங்கேறும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

அதனை எட்ட புரோ லீக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம். நாங்கள் சிறந்த அணி கிடையாது. ஆனால் ஒரு நல்ல அணி. அதேநேரத்தில் மற்ற அணிகள் எதிர்கொள்ள ஒரு கடினமான அணியாகும். நமது அணி இருக்கும் நிலைக்கும், உலக தரவரிசையில் முதல் 2 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை குறைக்க நாம் உழைக்க வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்