'எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்' - நீரஜ் சோப்ரா

தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்கொண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.

Update: 2024-04-11 21:17 GMT

புதுடெல்லி,

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். தற்போது ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

"பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன். இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன்.

ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்கொண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.

டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்."

இவ்வாறு நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்