விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்

சென்னையில் உள்நாட்டு விமானங்கள், வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

Update: 2024-03-22 01:01 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பாக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகள் வேண்டும். இதில் போக்குவரத்து வசதிகள் மிகவும் இன்றியமையாதது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் என்ற இலக்கை நிர்ணயித்து அதை அடையும் வகையில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இப்போது பரவலாக மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளை தொடங்கவும் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். சாலை வசதிகளை இன்னும் விரிவாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் போக்குவரத்து வசதி இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

புதிய ரெயில் பாதைகள் மட்டுமல்லாமல் கூடுதலாக பயணிகள் ரெயில்கள், பிரத்யேக சரக்கு ரெயில் பாதைகள் வேண்டும். விமானப் போக்குவரத்து வசதி இப்போது இருப்பது போதாது. தூத்துக்குடி வேகமான வளர்ச்சியை கண்டு கொண்டு இருக்கும் வகையில் இப்போது உள்ள விமான நிலைய வசதிகள் போதாது. பெரிய விமானங்களை குறிப்பாக சர்வதேச விமானங்களை கையாளும் வசதி, இரவில் விமானங்கள் வந்து இறங்கும் வசதி உடனடியாக வேண்டும். தென் மாவட்ட மக்களெல்லாம் சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய திருவனந்தபுரம் விமான நிலையத்தையே நாடும் நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த வசதிகள் வேண்டும். இப்போது நடந்து வரும் விரிவாக்க பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகின்றன. இதை விமான வேகத்தில் நடத்த வேண்டும். இதுபோல திருச்சி, கோயம்புத்தூர் விமான நிலையங்களிலும் கூடுதலாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து இறங்கும் வகையில் வசதிகள் விரிவாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கே பெருமை தேடி தரும் சென்னை விமான நிலையம் இப்போது தன் பெருமையை இழந்து வருகிறது. சென்னையில் உள்நாட்டு விமானங்கள், வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் மட்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாதாந்திர விமான சேவைகளின் எண்ணிக்கை ஆயிரம் குறைந்து இருக்கிறது. 2019 பிப்ரவரியில் மாதாந்திர விமான சேவையின் எண்ணிக்கை 6,682 ஆக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் 5,678 ஆக குறைந்துவிட்டது. பல நிறுவனங்கள் தாங்கள் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. விமான எரிபொருளான பெட்ரோல் சென்னையில் மாநில அரசின் வரியால் விலை அதிகம். ஆனால் ஐதராபாத்தில் விலை குறைவு. பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது.

அவர்கள் விமான நிலைய கட்டணங்களை குறைவாக வசூலிக்கிறார்கள். எனவே, விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையங்களில் இருந்து இயக்கவே விரும்புகிறார்கள். மேலும் சென்னை விமான நிலையத்தில் உள்ள பல வசதிகள் பற்றியும் குறைபாடு இருக்கிறது. சென்னையில் சர்வதேச விமானங்களுக்காக போதுமான எண்ணிக்கையில் ஏரோபிரிட்ஜ்கள் இல்லை. அதிக போக்குவரத்து இருக்கும் நேரங்களில் பல பெரிய விமானங்கள் ஏரோபிரிட்ஜ்களை பயன்படுத்த முடியாமல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் பஸ்களிலேயே போய் ஏறவேண்டியது இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் உள்ள குறைபாடுகளையெல்லாம் விரைவில் போக்கினால்தான் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கட்டமைப்பு வசதிகள் தாராளமாக இருந்தால் வளர்ச்சி தானாக வந்து கதவை தட்டும்.

Tags:    

மேலும் செய்திகள்