தேர்தல் வரை காத்து இருந்திருக்கலாமோ?

டெல்லி அரசு 2021-ல் ஒரு மதுபான கொள்கையை வகுத்ததில் இருந்தே, அந்த அரசுக்கு தலைவலி தொடங்கிவிட்டது.

Update: 2024-03-26 00:35 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், நடத்தை விதிகளும் அமலுக்கு வந்த 5 நாட்களில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் உலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-மந்திரி பதவியில் இருந்தபோதே ஜெயலலிதாவுக்கு அடுத்து இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்டில் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரனும் 2 மாதங்களுக்கு முன்பு அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

டெல்லி அரசு 2021-ல் ஒரு மதுபான கொள்கையை வகுத்ததில் இருந்தே, அந்த அரசுக்கு தலைவலி தொடங்கிவிட்டது. இந்த கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்க வழி வகுத்ததாகவும், லஞ்சம் கொடுக்கும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 2022-ல் இந்த மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டாலும், சி.பி.ஐ. இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இருந்தும், அமலாக்க பிரிவு நடவடிக்கையில் இருந்தும் இது தப்பவில்லை. பல கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலரை கைது செய்தது.

மணீஷ் சிசோடியா 2023-ம் ஆண்டு பிப்ரவரியிலும், சஞ்சய் சிங் அக்டோபர் மாதத்திலும், கட்சியின் தகவல் தொடர்பாளர் விஜய் நாயர் மட்டுமல்லாமல், சில தொழில் அதிபர்களும் அமலாக்க பிரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சி.யுமான கவிதாவும் இதே முறைகேட்டில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் மூளையாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டார் என்று இப்போது கோர்ட்டில் சொன்ன அமலாக்க பிரிவு, அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரிக்க சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அதை பொருட்படுத்தவில்லை. 9 சம்மன்களை சட்டைசெய்யாமல் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டு அவரை 28-ந்தேதி வரை அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது. 9 முறை சம்மன் கொடுத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்க பிரிவு கூறுகிறது.

டெல்லியிலும், பஞ்சாப்பிலும் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை களங்கப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சி, அரசியல் பழிவாங்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கைது நடவடிக்கை தேவையா? தேர்தல் முடியும் வரை காத்து இருந்திருக்கலாமே என்ற கருத்தும் அரசியல் அரங்கில் உலா வருகிறது. இந்த கைது நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சிக்கு அனுதாப அலையை ஏற்படுத்துமா?, பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமையுமா? என்பதே கேள்வி. டெல்லியில் 7 தொகுதிகள், பஞ்சாப்பில் 13 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள் போன்றவற்றில் இவை நேரடியாகவும் மற்ற மாநிலங்களில் மறைமுகமாகவும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?, வாக்காளர்களுக்கு என்ன மன ஓட்டம் இருக்கிறது? என்பதை தேர்தல் முடிவு காட்டிவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்