இது ஒரு வரலாற்று சோகம்
நெஞ்சை பதற வைக்கும் ஒரு கோர ரெயில் விபத்து ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகானகா பஜார் ரெயில் நிலையம் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணிக்கு நடந்து இருக்கிறது.;
நெஞ்சை பதற வைக்கும் ஒரு கோர ரெயில் விபத்து ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகானகா பஜார் ரெயில் நிலையம் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணிக்கு நடந்து இருக்கிறது. இந்த விபத்து தவறான சிக்னல் காரணமாகவே நடந்துள்ளது. 128 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தவறான சிக்னல் காரணமாக, மெயின் லைனில் இருந்து லூப் லைனில் திரும்பி, ஏற்கனவே அந்த தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி சில பெட்டிகள் தடம் புரண்டு தூக்கி வீசப்பட்டது. அதில் சில பெட்டிகள் அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்தன.
அதே தண்டவாளத்தில் எதிர்புறம் இருந்து 126 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டிகள் மீது இந்த பெட்டிகள் விழுந்ததால், அந்த ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1091 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து நடந்தவுடன் அருகில் உள்ள கிராம மக்கள் அலை அலையாய் அந்த இரவிலும் ஓடோடிவந்து, உருக்குலைந்து கிடந்த ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தவித்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்க, போலீசார், மருத்துவ குழுவினர், ரெயில்வே ஊழியர்களுக்கு துணையாக நின்றனர். மிகவும் உருக்கமான நிகழ்வு என்னவென்றால், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரத்ததானம் அளிக்க கியூவில் நின்றனர் என்றால், இதுதான் இந்தியா, இங்கு மனிதாபிமானம் தழைத்து இருக்கிறது என்பதை காட்டுகிறது.
பிரதமர் நரேந்திரமோடி துயரம் ததும்பிய முகத்தோடு அந்த இடத்துக்கு உடனடியாக வந்து பார்வையிட்டார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபெறுவதாக இருந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ரத்து செய்துவிட்டு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், கூடுதல் தலைமை செயலாளர்கள் குமார் ஜெயந்த், பணீந்தர ரெட்டி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோரை அனுப்பிவைத்து, அங்கு தங்கியிருந்து விபத்தில் சிக்கிய தமிழக பயணிகளை மீட்டு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார். தென்னிந்திய ரெயில்வேயும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
இந்த கொடூர விபத்துக்கான காரணத்தை கண்டறிய ஒரு உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. "இந்த விபத்துக்கான காரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, யார் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது" என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், ஒரு தண்டவாளத்தில் ரெயில் நின்று கொண்டிருக்கும்போது மற்றொரு ரெயிலுக்கு சிக்னல் கொடுக்க முடியாத அளவு செய்து, இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உடனடியாக ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே இப்போதைய வேண்டுகோளாக இருக்கிறது. இது ஒரு வரலாற்று சோகம். தீராத சோகம். ஆனாலும் உடனடியாக அனைத்து பணிகளையும் மின்னல் வேகத்தில் செய்த ரெயில்வே நிர்வாகம், ஒடிசா மாநில அரசாங்கம், அந்த பகுதி கிராம மக்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு அனைவருமே நன்றிக்குரியவர்கள்.