முதல்-அமைச்சர் பெருமை கொள்ளும் பெண்கள் நலத் திட்டங்கள்!

பெண்களுக்காக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றினாலும் முத்தான 3 திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம் மூலம் நேரடி பணப்பலன் கிடைக்கிறது.

Update: 2024-03-26 22:49 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி உள்பட நாட்டில் உள்ள பெரிய தலைவர்கள், சர்வ கட்சி தலைவர்கள், திரளான தி.மு.க. தொண்டர்கள் என்று எண்ணற்றோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர். தன் பிறந்த நாளின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்படைந்து பெருமிதம் கொண்டது, மகளிர் முன்னேற்றத்துக்காக அவர் நிறைவேற்றிய திட்டங்களை எண்ணித்தான்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அவர் எடுத்துவரும் முயற்சிகளைவிட அவருக்கு மகிழ்ச்சி அளிப்பது பெண்களுக்காக அவர் நிறைவேற்றியுள்ள புதிய திட்டங்கள்தான். அவருடைய பிறந்த நாள் செய்தி எதையும் அரசு வெளியிடவில்லை. மாறாக மகளிர் மகிழும் வண்ணம் அவர்களுடைய முன்னேற்றத்தில் முதல்-அமைச்சர் எடுத்துக்கொண்ட சிறப்பு கவனம் பற்றியே பட்டியலிடும் வகையில், "தாய் மனம் கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறது மகளிர் சமுதாயம்" என்ற தலைப்பில் தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. வருமானம் இன்றி சிரமப்படும் ஏழை மகளிரின் துயர் துடைத்திட அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி-கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தி, 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை, இது உதவித்தொகை அல்ல; உரிமைத் தொகை என வழங்குகிறார்.

மகளிர் சமுதாயத்தை மனம் குளிர செய்துள்ள இந்த மாபெரும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு செயல்படுத்தி முதல்-அமைச்சரை பாராட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில், தொடக்க செய்தியாக கூறப்பட்டுள்ளது. அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை கொள்ளும் திட்டம் புதுமைப்பெண் திட்டமாகும். அரசு பள்ளிக்கூடங்களில் படித்து கல்லூரியில் சேரும் மகளிருக்கு புதுமைப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 4 லட்சத்து 81 ஆயிரத்து 705 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி, மகளிர் இடையே தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார் நமது முதல்-அமைச்சர் என்று கூறி, அடுத்த சாதனையாக விடியல் பயணம் திட்டம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

விடியல் பயணம் மூலம் மகளிருக்கு கட்டணம் இல்லாத பஸ் பயணம் திட்டம் தந்து, ஒவ்வொரு பெண்ணும் ரூ.888 வரை சேமிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார். இதுவரை இந்த திட்டத்தில் மகளிர் 445 கோடி முறை பயணம் செய்து பயனடைந்துள்ளனர் என்று கூறி, அதன் தொடர்ச்சியாக அவர் பொறுப்பேற்றது முதல் இதுவரை பெண்களுக்காக நிறைவேற்றியுள்ள திட்டங்கள் அந்த அறிக்கையில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. நிறைவாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைப் பற்றியும், அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையையும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்காக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றினாலும் முத்தான 3 திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம் மூலம் நேரடி பணப்பலன் கிடைக்கிறது. இந்த பணப்பலன்கள் அந்த பெண்களுக்கு மாதந்தோறும் கையில் கிடைப்பதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்கள் குறித்து தன் பிறந்த நாளில் பெருமை கொண்டது சாலப்பொருத்தமாகும். மகளிர் சமுதாயத்தை கை தூக்கிவிடுவதற்காக அவர் நிறைவேற்றியுள்ள இந்த திட்டங்கள் பாராட்டுக்குரியது. இது அவருடைய பெயரை காலா காலமாக சொல்லும் திட்டங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்