சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு மலையாளத்து வல்லய ஊர்வலம் புறப்பட்டது

ஆரல்வாய்மொழியிலிருந்து கொண்டு சென்ற மலையாளத்து வல்லயத்தை பக்தர்கள் எடுத்து சென்று பூக்குழி இறங்குவார்கள்.;

Update:2025-07-20 14:57 IST

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 10 நாட்கள் திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி 14-ம் தேதி திங்கள்கிழமை கால்கோள் விழா நடைபெற்றது.

கோவில் விழாவுக்கு ஆரல்வாய்மொழியிலிருந்து மலையாளத்து வல்லயம் நடையாக எடுத்துச் செல்லப்பட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றடைந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழாவிற்காக இன்று (20-ம் தேதி) வல்லயம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர், அகஸ்தியர், மற்றும் வல்லையத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் வல்லயத்தை ஊர்வலமாக எடுத்துவந்து ஆனந்தவள்ளி அம்மன் கோவில், மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள மாடன் தம்புரான் கோவிலுக்கு கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து ஒலிமறவன் கோவில், பூதத்தார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், தாணுமாலையின்புதூர் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில், கரடி மாடன் சுவாமி கோவில், சங்கிலி பூதத்தார் கோவில், வடக்கு பெருமாள்புரம் முத்துமாரியம்மன் கோவில், வேம்படி சுடலைமாடன் சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வல்லயம் எடுத்து செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் பக்தர்கள் நடை பயணமாக முப்பந்தல் கோவிலை சென்றடைந்து அங்கிருந்து பணகுடி வழியாக சென்று களக்காடு அருகே உள்ள பிளவு கல் இசக்கியம்மன் கோவிலில் சென்றடைகின்றனர். அங்கிருந்து மணிமுத்தாறு அணை வழியாக சென்று காட்டுபாதையாக வல்லயம் பக்தர்களால் பக்திகோஷத்துடன் கொண்டு செல்லப்படுகிறது.

வரும் 23 -ம் தேதி வெள்ளிகிழமை காலை 11 மணியளவில் நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வல்லயம் கொண்டு செல்லப்படுகிறது. அன்று இரவு மேலவாசல் சங்கிலி பூதத்தார் தளவாய் சுவாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாடன் தம்புரான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது,

தொடர்ந்து பிரம்ம சக்தி அம்மன் மற்றும் பூதத்தாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்ன படையலும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது, இதேபோல மற்ற தெய்வங்களுக்கும் பூஜைகள் நடக்கின்றன.

24ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி மதியம் 1 மணிக்கு மாட்டாம் மந்தையில் அகஸ்தியருக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு பூதத்தார் மற்றும் தளவாய்சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் பூக்குழி நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் ஆரல்வாய்மொழியிலிருந்து கொண்டு சென்ற மலையாளத்து வல்லயத்தை பக்தர்கள் எடுத்து சென்று பூக்குழி இறங்குவார்கள். அதனை தொடர்ந்து பல இடங்களிலிருந்து வந்த வல்லயங்களுடன் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்,

25-ம் தேதி காலை பட்டவராயன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு பூதத்தார் மற்றும் தளவாய்சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்