இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியுடன் நடிகர் ரவி மோகன் சந்திப்பு
இலங்கை சென்ற நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா ஆகியோர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்தனர்.;
இலங்கை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம். இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில், இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. "இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும் உதவும்" என மந்திரி விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
தான் இசையமைத்துப் பாடி, அண்மையில் வெளியான 'அன்றும் இன்றும்' என்ற மியூஸிக் வீடியோ தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கெனீஷா இலங்கை சென்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகி கெனீஷா பகிர்ந்துள்ளார்.