நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

ரோபோ சங்கரின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-09-18 21:35 IST

சென்னை,

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர்(வயது 46). இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நேற்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்