“மண்டாடி” பட அப்டேட் கொடுத்த நடிகர் சூரி

‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.;

Update:2025-10-17 17:34 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாமன்' படம் வெளியானது. குடும்ப கதைக்களத்தில் வெளியான இந்த படத்தினை பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

‘மண்டாடி’ படத்தில் படப்பிடிப்பு பணிகள் ராமநாதபுரத்தின் தொண்டி என்கிற கடற்பகுதியில் நடந்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. . இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் இசை குறித்து நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “மண்டாடி படம் எங்கள் இசையமைப்பாளரின் மந்திர இசையால் இன்னும் பிரம்மாண்டமாக ஜொலிக்கும்! இந்த தீபாவளி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் எங்கள் இயக்குனர் மதிமாறன் உரையாடலுடன் உற்சாகமாக தொடங்கியது. 100+ படங்களில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார். ‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்