ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல்
இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.;
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது இரு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கும்பல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களை பின்தொடர்ந்த மற்றொரு கும்பல் அந்த காரை மறித்து, அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.
இந்த கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரு தரப்பிலும் சுமுகமாக பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டதாக கூறியதால், கேரள ஐகோர்ட்டு லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.