"ஜெயிலர் 2" படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
இதுவரை 170-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஹீரோவாக வலம் வருகிறார். இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களை கைவசம் வைத்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பிலும், அவருடன் இணைந்தும் படங்களில் நடிக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும், ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.