சினிமாவினால்தான் போதைப்பொருள் பயன்பாடு, குற்றங்கள் அதிகரிக்கிறதா? - 'மார்கோ' பட நடிகர் காட்டம்
சினிமாவினால் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.;
சென்னை,
கடந்த சில நாட்களாக மலையாள சினிமாவே பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. மலையாள நடிகை வின்சி அலோசியஸ், தான் நடிக்கும் படத்தின் ஹீரோ, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் வாயில் வெள்ளை நிற பவுடர் (போதைப்பொருள்) வைத்திருந்ததாகவும் சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.
இந்த சூடு அடங்கும் முன்பே, போதைப்பொருள் தொடர்பாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது சர்ச்சை எழுந்தது. இதற்கிடையில், சினிமாவினால் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தநிலையில், இந்த விமர்சனங்களுக்கு 'மார்கோ' பட நடிகர் உன்னி முகுந்தன் பதிலளித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், "இவ்வளவு அதிக எழுத்தறிவு விகிதம் உள்ள ஒரு மாநிலத்தில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக நாம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சினிமாவினால்தான் போதைப்பொருள் பயன்பாடு, குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று சொல்வது சரியல்ல. அவை எப்படி இங்கு வருகின்றன?, அது பள்ளிகளை எப்படி சென்றடைகிறது?.
இதற்கு திரைப்படங்களை குறை கூற முடியாது. அது வெறும் திரைப்படம் மட்டும்தான். சமூகத்தில் நடக்கும் விஷயங்களை படம் சுட்டிக்காட்டுகிறது. இது போதைப்பொருள் பயன்பாட்டை ஒருபோதும் ஊக்குவிக்காது. சினிமா மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. திரைப்படங்களை நோக்கி விரல் நீட்டுவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது' என்றார்.