17 ஆண்டுகளாக... பகத் பாசில் பயன்படுத்தும் பட்டன் போன் பற்றி தெரிஞ்சுக்கோங்க

சமீபத்தில் மாரீசன் படத்தின் டீசர் வெளியானது. இந்த படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-07-17 21:04 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள படங்களில் நடித்து, ரசிகர்களிடையே அறிமுகமானபோதும், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்து இருக்கிறார்.

எனினும் அவர் எந்த சமூக ஊடக பயன்பாட்டிலும் இல்லை. இதுபற்றி அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறும்போது, சமூக ஊடகம் வழியே என்னுடைய படங்களை நான் விளம்பரப்படுத்த போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். எனக்கு எந்த சமூக ஊடக கணக்கும் இல்லை.

கல்லூரி நாட்களில் பேஸ்புக் கணக்கு இருந்தது. அத்தோடு அது முடிவுக்கு வந்து விட்டது. அதன்பின்பு, அந்த பக்கமே நான் செல்வதில்லை. சமூக ஊடகத்திற்கு பதிலாக மக்களுடன் மக்களாக இணைந்திருக்கவே நான் விரும்புகிறேன் என்றார்.

அவருடைய எளிமையான வாழ்க்கை பற்றி மலையாள நடிகரான வினய் போர்ட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது, பகத் பாசில் எந்தவொரு சமூக ஊடகமோ அல்லது தொடுதிரை வசதியுடைய மொபைல் போனையோ பயன்படுத்துவதில்லை. அவர் பட்டன் போனையே பயன்படுத்தி வருகிறார் என கூறினார்.

ஆனால், அதுபற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அவர் பயன்படுத்த கூடிய மொபைல் போன் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட, கையால் வடிவமைக்கப்படும் ஆடம்பர ரக மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றான வெர்து என்ற நிறுவனத்தின் தயாரிப்பையே அவர் பயன்படுத்தி வருகிறார்.

இந்திய மதிப்பில் அதன் விலை ரூ.10 லட்சம். பட்டனை பயன்படுத்தி உபயோகிக்க கூடிய இந்த மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வருவதில்லை. உற்பத்தியும் இல்லை. 17 ஆண்டுகளுக்கு முன் 2008-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட போனையே, அவர் வைத்து பயன்படுத்தி வருகிறார்.

எனினும், புளூடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஆகிய நவீன வசதிகளை பயன்படுத்த முடியும். டைட்டானியம் என்ற உலோகம் கொண்டு கட்டமைக்கப்பட்ட, நீல கற்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் கையால் தைக்கப்பட்ட தோல் என பல சிறப்பம்சங்களுடன், பல்வேறு வசதிகளுடன் இந்த போன் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

அவர், தமிழில் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார். அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்தது பரவலாக பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த வரவேற்பையும் பெற்றது.

பட வரிசையில் அவர், மாலிவுட் டைம்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதுடன், மாரீசன், ஓடும் குதிர சாடும் குதிர, பேட்ரியாட் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். வடிவேலு உடன் நடித்த மாமன்னன் படம் பெற்ற வெற்றியால், அவருடன் சேர்ந்து மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் மாரீசன் படத்தின் டீசர் வெளியானது. இந்த படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் தி இடியட் ஆப் இஸ்தான்புல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்