சூதாட்ட செயலிகளை ஊக்குவித்த வழக்கு: நடிகர் ராணா ஆஜர் ஆகவில்லை
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.;
ஐதராபாத்,
ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து 29 நடிகர்- நடிகைகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் 23-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்தவாரம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நடிகர் ராணா நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராவதை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் ஆகஸ்டு 11-ந்தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகிற 30-ந்தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்டு 6-ந்தேதியும், நடிகை லட்சுமி மஞ்சு ஆகஸ்டு 13-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.