விஜய் கூத்தாடின்னா உதயநிதியும் கூத்தாடிதான் - இயக்குநர் பேரரசு
எம்ஜிஆரை கூத்தாடி என அழைத்தார்கள். இன்று விஜய்யை கூத்தாடி என கூறுகிறார்கள் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களம் கண்டு வருகிறார். கடந்த 21ம் தேதி நடந்த தவெக மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் எனக் கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் இந்த பேச்சுக்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் தவெக மாநாட்டில் பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளிவிடும் காட்சி வீடியோவாக வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் தவறில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார். ஒவ்வொரு நாளும் விஜய் குறித்தும் அவர் பேசிய விதம் குறித்தும் அரசியல் விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினை தாக்கி பேசியதை பொறுக்க முடியாத தி.மு.க தொண்டர்கள் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
த.வெ.க தலைவர் விஜய்யை சினிமாகாரர் என்றும் கூத்தாடி என்றும் பலரும் விமர்சித்து வரும் நிலையில் இயக்குநர் பேரரசு திண்டுக்கல்லில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எம்ஜிஆரை போன்று செல்வாக்கு மிக்க நடிகரை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் அவரையே கூத்தாடி என அழைத்தார்கள். இன்று விஜய்யை கூத்தாடி என கூறுகிறார்கள். இப்படி கூறியதால் எம்ஜிஆர் ஒன்றும் இறங்கி போகவில்லை. நாம் வணங்கும் சிவனும் கூத்தாடி தான். கூத்தாடி என்றால் அவமானமா? உதயநிதி ஸ்டாலினும் படங்களில் நடித்தார். இப்போது அவர் துணை முதலமைச்சராக உள்ளார். அப்படி பார்த்தால் அவரை துணை கூத்தாடி என்று அழைக்கலாமா? விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான். விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். ஆனால் சில அரசியல்வாதிகள் ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவார்கள், ஆனால் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தவிர்க்கின்றனர். இது பாரபட்சம்.” என தெரிவித்தார்.