கேரள நடிகை பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு

நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்று கூறி எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்தது.;

Update:2025-12-12 17:45 IST

எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடிகை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில அரசும், முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்