தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்

‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு தொடங்கியதால், அதன் முன்பணத்தை வைத்து தான் முதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக தொடங்க முடிவெடுத்துள்ளதாக ராகவா கூறியுள்ளார்.;

Update:2025-09-12 09:39 IST

சென்னை,

பல ஆண்டுகளாக, சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல் மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ ‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போது படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினாலும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன். குரூப் டான்ஸராக இருக்கும் போது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதனை அம்மாவிடம் கொடுத்து அப்படி வந்த பணத்தில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இந்த வீடு.

முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு நாம் வாடகை வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று அம்மாவிடம் கேட்டு அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப் போகிறோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை வந்து பார்க்கும் போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது. எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம்

அதோடு கல்வியை இலவசமாக கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இப்போது டீச்சராகிறார். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர்” என்று கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019-ல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ராகவேந்திரா புரடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 4’ உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்