இந்தியா உங்கள் தாய்: துணிச்சலாக இருங்கள்- ஏஆர் ரகுமானுக்கு மக்களவை எம்.பி ஆதரவு
ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகிறார்கள்.;
கொல்கத்தா,
பாலிவுட் திரையுலகம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்த கருத்துகள் கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரத்தில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது. ஏஆர் ரகுமானின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றிய பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், ஏ ஆர் ரகுமான் பாகுபாடு காட்டக் கூடியவர் என்றும் அவரைப் போன்று வெறுப்பு நிறைந்த மனிதரை தான் பார்த்ததில்லை என சாடினார்.
தனது கருத்து பேசு பொருளான நிலையில், வீடியோ மூலம் ஏஆர் ரகுமான் விளக்கமளித்து இருந்தார். அதில், யாரையும் புண்படுத்தும் எண்ணம் தனது நோக்கமில்லை எனக்கூறிய ஏ.ஆர் ரகுமான், வந்தே மாதரம், மா துஜே சலாம் பாடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு தனது பாணியிலேயே வீடியோவில் பதிலளித்து இருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுவதாகவும் இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா ஏஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: -
"இந்தியா உங்கள் தாய்: நீங்கள் மவுனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முகம்மது அலி போன்ற உலகப்புகழ் பெற்ற நட்ச்த்திரங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றே எதிர்த்தனர். நீங்களும் துணிச்சலாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.