ரீ - ரிலீஸாகும் டி.ராஜேந்தரின் “உயிருள்ளவரை உஷா”
‘உயிருள்ள வரை உஷா’ படத்தை 4கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.;
சென்னை,
வெள்ளி விழா கொண்டாடிய ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் 42 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இந்த படத்துக்கு முன்னர் தமிழ் சினிமாவில் ரயில் பயணங்களில் உள்பட சில படங்களை இயக்கியிருந்தார் டி. ராஜேந்தர். அதுவரை தனது படங்களில் கேமியோ, கெளரவ வேடம், சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி வந்த டி. ராஜேந்தர் ஹீரோவாக படம் முழுக்க தோன்றியது ‘உயிருள்ள வரை உஷா’ படத்தில்தான்.
தனது படங்களில் இயக்கம், எழு்த்து பணிகள் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்பட இதர பொறுப்புகளை ஏற்று செய்து வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பிலும் பட்டையை கிளப்பினார். அதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான இருந்த இலக்கணங்களை உடைத்தெறியும் விதமாக தாடியுடன் கூடிய லுக்கும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தி டி.ராஜேந்தர் ஸ்டைலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
‘உயிருள்ள வரை உஷா’ படம்தான் டி. ராஜேந்தர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படமாகவும் அமைந்தது. தனது காதலியின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகங்களாக தோன்றினர். அதேபோல் பிரமாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற பார்முலா தொடங்கியதும் இந்த படத்தில்தான்.
தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார். படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைத்தார். மேகம் வந்து தாகம், இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் போன்ற பாடல்கள் அந்த கால இளசுகளை தாளம் போட வைத்தது. பாடகர் கே.ஜே. யேசுதாஸ் குரலில் வைகை கரை காற்றே நில்லு பாடல் காலத்தால் அழியாத மெலடியாக நிலைத்து நிற்கிறது.
படம் முடிந்து ரிலீசாவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதிலும், வெளியான பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கும் ஹிட்டானது.,இதன் பின்னர் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 1983ல் வெளியாகி, ‘உயிருள்ள வரை உஷா’ வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் ‘உயிருள்ள வரை உஷா’ படத்தை 4கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்திரன் கூறியுள்ளார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.