கிரிக்கெட் வெப் தொடரில் அறிமுகமாகும் விக்ராந்த்
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப் தொடர் வெளியாக இருக்கிறது.;
ஹார்ட்பீட், போலீஸ் போலீஸ் மற்றும் ஆபீஸ் போன்ற வெப் தொடர்களை தொடர்ந்து தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப் தொடர் வெளியாக இருக்கிறது. ‘ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீ பேக்டரி இந்த தொடரை தயாரித்துள்ளது.
இந்த தொடர் மூலம் விக்ராந்த் வெப் தொடரில் அறிமுகமாகிறார். சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். வருகிற புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தவர், சில பிரச்னைகள் காரணமா தனது புகழை இழக்கிறார். பின்னர் தானே ஒரு கிரிக்கெட் டீமை உருவாக்கி இழந்த புகழை எப்படி மீண்டும் அடைகிறார் என்பதுதான் தொடரின் கதை.
தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் கூறும்போது, “ஜியோ ஹாட்ஸ்டாருடன் முதன் முதலாக இணைகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.