மாரி செல்வராஜுக்கு “இயக்குநர் திலகம்” பட்டம் வழங்கிய வைகோ
‘இயக்குநர் திலகம்’ என குறிப்பிட்டு வைகோ எழுதிய பாராட்டு சான்றிதழை திருச்சி எம்.பி துரை வைகோ மாரி செல்வராஜிடம் வழங்கினார்.;
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.‘பைசன்’ படம் கடந்த 17ம் தேதி வெளியானது. 'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பைசன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பைசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பைசன் திரைப்படம் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
‘பைசன்’ படத்தை பார்த்து வியந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தகவலை மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா. இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.
‘பைசன்’ படம் உலகளவில் 10 நாட்களில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியானதால் வரும் நாட்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பைசன்’ படத்தை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாரி செல்வராஜ்க்கு ‘இயக்குநர் திலகம்’ என்ற புதிய பட்டத்தை கொடுத்துள்ளார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இயக்குநர் திலகம்’ என குறிப்பிட்டு எழுதிய பாராட்டு சான்றிதழை திருச்சி எம்.பி துரை வைகோ.மாரி செல்வராஜிடம் வழங்கினார்.