சென்னை: பித்தளை தாம்பாளங்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை
விநாயகர் சிலை செய்வதற்கு 2,300 எண்ணிக்கையுள்ள பித்தளை தட்டுகளும், விநாயகரின் கிரீடத்திற்கு 1500 குங்குமசிமிழ் தட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.;
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து விதவிதமாக அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.
இதேபோல் கோவில்கள், இந்து அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், நிறுவனங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது.
அவ்வகையில், சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தரணி விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 42 அடி உயரம் கொண்டது. இந்த சிலை செய்வதற்கு 2,300 எண்ணிக்கையுள்ள பித்தளை தட்டுகளும், விநாயகரின் கிரீடத்திற்கு 1500 குங்குமசிமிழ் தட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான விநாயகரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வழிபட்டு செல்கின்றனர்.