மதுரை ஆவணி மூலத்திருவிழா நிறைவு: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார்

முருகப்பெருமான், தெய்வானையுடன் 5 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-09-08 11:41 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி முதல் இந்த மாதம் 6-ம் தேதி வரை விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த 3-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடந்தது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க பாண்டிய மன்னனாக முருகப்பெருமான், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் திரளாக திரண்டு திருக்கண் அமைத்து சுவாமி, அம்பாளை வரவேற்று தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தந்தார். முருகப்பெருமான், தெய்வானையுடன் 5 நாட்கள் மதுரையில் தங்கி இருந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழா நிறைவடைந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு பல்லக்கில் முருகப்பெருமான், தெய்வானையுடன் மேளதாளங்கள் முழங்க மீனாட்சி கோவிலில் இருந்து தெற்காவணி மூலவீதி வழியாக திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார். பகல் 12.55 மணிக்கு முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார். 1.10 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் திருவாதவூர் மாணிக்கவாசகரும் இருப்பிடத்திற்கு பல்லக்கில் புறப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்