நாக சதுர்த்தி: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;
நாக தேவதைகளை வழிபடுவதற்கான நாக சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கோவில்களில் நாக தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. குடும்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் நீங்கி சுபிட்சமாக வாழவும், மன அமைதிக்காகவும் நாக சதுர்த்தி நாகர் சிலைகளுக்கும், பாம்பு புற்றுக்கும் பால் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விரதம் இருந்து, நாக தேவதைகளுக்குப் பால் மற்றும் பழங்களை படைத்து வழிபட்டனர்.
நாக சதுர்த்தியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலை சின்ன ஜீயர் சுவாமிகள், ஆந்திர அமைச்சர் நாதெண்டல மனோகர், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, விஜிஓ சுரேந்திரா, பேஷ்கார் ராம கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.