திருவண்ணாமலை கோவிலில் பராசக்தி அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்

பராசக்தி அம்மன் தேரில் நான்கு புதிய மரச் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.;

Update:2025-09-02 16:28 IST

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் போது 7-ம் நாள் விழாவன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும்.

அன்றைய தினம் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி மர தேரில் எழுந்தருளி தனித்தனியாக மாட வீதியில் வலம் வருவார்கள். இதில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.

இந்த நிலையில் சுமார் 45.11 அடி உயரமுள்ள பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.71 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணி நேற்று தொடங்கியது. இதற்காக கோவில் ஊழியர்கள் பராசக்தி அம்மன் தேரை சுற்றி பாதுகாப்பிற்காக அமைத்து இருந்த மேல் தகர சீட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பராசக்தி அம்மன் தேரில் நான்கு புதிய மரச் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. தேரின் மேல் 5 நிலைகள், உச்சியில் அமைந்துள்ள மேல் கூண்டு உள்ளிட்டவற்றை புனரமைக்க உள்ளதாக கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்