பிரதோஷ விழா.. சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-10-19 13:41 IST

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவலிங்கத்திற்கும் நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் 2ம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார் இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்தி பகவானுக்கு சனிமஹாபிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோயில், ஒண்ணுபுரம் கச்சியபேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள சிவன் கோயில்களில் நந்தி பகவானுக்கு சனிமஹாபிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

செங்கோட்டை

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயில உடனுறை குலசேகரநதார் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு மாபொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார்.

மகா சனி பிரதோஷத்தையொட்டி செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர். இதனை போன்று செங்கோட்டை ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில் புளியரை கோவில் இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோச வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் நன்செய்புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மேகபாலீஸ்வரர் முன்பு உள்ள நந்தி பகவானுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி, திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேகபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமான் மற்றும் மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

இதேபோல் புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவிலில் உள்ள நந்தி பெருமான், நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில் உள்ள நந்தி பெருமான், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், சிவபெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்