புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி ஆதி நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
மேலும் கோபி ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் கோவில், கோபி மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவில், மொடச்சூர் பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்லவ காலத்து குடவரை கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் சார்பில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
கருவறைக்கு வெளியே தாயார் சன்னதி உள்ளது. வழக்கமாக பெருமாளை தரிசனம் செய்துவிட்டு தாயார் சன்னதிக்கு வந்து வணங்கிவிட்டு பின்னர் தாயார் சன்னதியை வலம் வந்து வெளியே வருவார்கள். ஆனால் இன்று பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் தாயார் சன்னதியை வலம் வர அனுமதிக்கவில்லை.
மேலும் முதியவர், குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு திருப்பதியில் இருப்பது போல் ஆங்காங்கே குடிநீர் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கேட்டறிந்த பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் டிரஸ்ட் தலைவர் வி.எல்.எஸ். சந்திரன், உடனடியாக இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சௌந்தரராஜ பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி ரமேஷ் ஜெகநாதன் மணியம் அரவிந்தசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி- கல்லணை சாலையில் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது திவ்ய தேச கோவில்களில் ஒன்றான ஸ்ரீ அப்பால ரங்கநாதர் திருக்கோவில். இங்கு ஸ்ரீ அப்பால ரங்கநாதர் சயன கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் துளசி மாலைகளை சுவாமிக்கு வழங்கி வழிபாடு செய்தனர். கோவிலின் முன் மண்டபத்தில் ஸ்ரீ அப்பால ரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளி காட்சி தந்தார். திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாள் திருக்கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பெருமாளை வணங்கி சென்றனர். அருகாமையில் உள்ள வெங்கம்பூர் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவிலில் லஷ்மி நரசிம்மருக்கு சந்தனம், தயிர், நெய் உட்பட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து துளசி மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், அரிசி மாவு கலவையினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இதேபோல் ஊஞ்சலூர் மற்றும் கொந்தளம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலிலும் இன்று புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
போடி நகர் மைய பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தயிர் ,சந்தனம் போன்ற 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு முத்தங்கி அணிவித்து, ஏலம் மணக்கும் போடி மாநகரின் ஏலக்காய் மற்றும் உலர் பழங்களான பாதாம், முந்திரி, அத்தி பழங்கள் கொண்டு கட்டப்பட்ட மாலை, வெட்டி வேர் மாலை, 108 தாமரை மலர்கள் கட்டப்பட்ட மாலை ஆகியவற்றை அணிவித்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர், அர்ச்சகர் கார்த்திக் பட்டாச்சாரியர் தலைமையிலான அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.
அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள பேட்டை பெருமாள் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
அந்தியூர் சிவசக்தி நகரில் அமைந்துள்ள கோட்டை அழகராஜா பெருமாள் கோவில், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், பருவாச்சி மலைக்கோவில் உள்ள கரிய வரதராஜ பெருமாள் கோவில், கெட்டி சமுத்திரம் கரை பெருமாள் கோவில், அந்தியூர் பெரியேரி திரையில் அமைந்துள்ள கரை பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.