சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.;
சபரிமலை,
சித்திரைத் திருநாள் என்று அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு மற்றும் கேரளாவில் விஷூ பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விஷூ கனி காணல் மிக முக்கியமான சடங்காகும். இந்த நாளில் கோவில்களில் கனி காணல் மற்றும் கை நீட்டம் வழங்குதல் சிறப்பம்சம்.
இதனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று வழக்கத்தை விட முன்னதாக அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4 மணி முதல் காலை 7 மணி வரை பக்தர்கள் கனி கண்டு தரிசனம் நடத்தினர். இதற்காக பலவகையான பழங்கள், மஞ்சள், அரிசி, வெற்றிலை பாக்கு, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
விஷூ கனி தரிசனம் காண ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் குவிந்திருந்தனர். இந்த பக்தர்களுக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி அருண் குமார் நம்பூதிரி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்கினர்.
இதுபோல் குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில், பழஞ்சிரை தேவி கோவில், சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வீடுகளிலும் பொதுமக்கள் கனி காணும் நிகழ்ச்சியை நடத்தினர்.