முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி: கன்னியாகுமரியில் நடராஜர் வாகன பவனி

நடராஜர் வாகன பவனி, திரிவேணி சங்கமம் கடற்கரையை அடைந்ததும் கடல் அன்னைக்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது.;

Update:2025-09-08 15:29 IST

கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 50-வது ஆரத்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கத்தில் சனாதன தர்மமும் பாரத கலாச்சாரமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பின்னர் மாலையில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஏகாட்சர மகாகணபதி கோவிலில் பஜனை மற்றும் 7 கன்னி பெண் குழந்தைகளுக்கு சப்த கன்னியர் பூஜை நடந்தது. அதன் பிறகு முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி ஊர்வலம் நடந்தது.

விவேகானந்தபுரம் ஏகாட்சர மகா கணபதி கோவிலில் இருந்து கயிலை வாத்தியம் முழங்க திருமுறைகள் ஓத பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்கள் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு, பகவதி அம்மன் கோவில் வழியாக திரிவேணி சங்கமம் கடற்கரையை சென்றடைந்தது. அங்கு உள்ள பரசுராமர் பிரதிஷ்டை செய்த விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. அதன் பிறகு முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி தொடங்கியது.

இந்த ஆரத்தியை பா.ஜ.க. மாநில செயலாளர் அஷ்வத்தாமன் தொடங்கி வைத்தார். இதில் ஆரல்வாய்மொழி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட பா.ஜ.க. ஆன்மீக பிரிவு செயலாளர் ஜெயராம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட அ.தி.மு.க துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் அய்யப்பன், முன்னாள் நகர சபை தலைவி மீனாதேவ் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து கடல் அன்னைக்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது. சுமங்கலி பெண்கள் கையில் தீபம் ஏந்தி அகல் விளக்கு பூஜை நடத்தினார்கள். பின்னர் 5 அடுக்கு ராட்சத தீப தட்டு கொண்டு பௌர்ணமி நிலவுக்கு 5 சிவாச்சாரியார்கள் தீபம் காட்டினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்