விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-08-24 15:33 IST

சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

11-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.

மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமானும் வள்ளி அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளி வீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சென்றடைய உள்ளனர்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்