விதவிதமான வழிபாட்டு முறைகள்.. இந்து பண்டிகைகளில் முக்கிய இடம்பிடித்த தசரா
இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.;
இந்தியா முழுவதும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது, தசரா திருவிழா. நவராத்திரியின் ஒன்பது நாட்கள் நிறைவடைந்த பிறகு பத்தாவது நாளாக தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கா தேவி மகிஷாசுரனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியது தசரா விழாவாக சிறப்பிக்கப்படுகிறது. தசரா விழாவை விஜயதசமி என்றும் அழைப்பர். இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. அதில் சில மாநிலங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களை பார்ப்போம்.
குலசேகரன்பட்டினம்
தமிழ்நாட்டில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடு, கோவில்களில் கொலு வைத்து துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை வழிபடுகின்றனர். 10-வது நாள் துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்றதையே தசரா விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் மிகவும் விசேஷமாக நடத்தப்படுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இங்குள்ள முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதில் பக்தர்கள் ஒவ்வொரும் தெய்வங்கள், அரக்கர்கள் என பல்வேறு வேடம் அணிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
மைசூர்
கர்நாடக மாநிலத்தின் கலாசார தலைநகரான மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த தசரா விழா, ‘நாடா ஹப்பா’ என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தின் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இது மைசூரின் ராஜவம்சத்தால் நடத்தப்படுகிறது. இந்த தசரா விழாவில் மைசூர் அரண்மனை, சாமுண்டேஸ்வரி கோவில், மைசூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டும். 10 நாட்கள் கொண்டாட்டத்தில் மைசூர் அரண்மனை பல லட்சம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரூட்டப்படும். விழாவில் சாமுண்டேஸ்வரி தேவி, அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். இந்த ஊர்வலம் மைசூர் அரண்மனையில் இருந்து தொடங்கி, ‘பன்னிமண்டபம்’ என்றழைக்கப்படும் வன்னிமர மைதானத்தில் முடிவடையும். ஊர்வலத்தின் போது, இசை, நடனம், கலாசார நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளால் மைசூர் நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கும்.
கொல்கத்தா
மேற்கு வங்காளத்தின் முக்கிய தெய்வமாக கருதப்படுபவர், துர்க்கா தேவி. கொல்கத்தாவில் துர்க்கா பூஜை 10 நாட்கள் நடைபெறும். அந்த துர்க்கா பூஜையின் கடைசி நாளாக தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கா பூஜையின் ஒன்பது நாட்களும் துர்க்கா தேவியின் பிரமாண்ட சிலைகளை அலங்கரித்து பந்தல்களில் வைத்து வழிபாடு செய்வார்கள். திருமணமான பெண்கள், துர்க்கா தேவிக்கு குங்குமம் வைத்து வழிபடுவார்கள். 10-வது நாள் துர்க்கை சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு அல்லது குளங்களில் கரைப்பார்கள்.
குஜராத்
குஜராத்தில் தசரா விழாவின் சிறப்பு அம்சமே, கர்பா மற்றும் தாண்டியா நடனம் தான். துர்க்கா தேவி, மகிஷாசுரனை அழித்து வெற்றி கொண்டதை குறிக்கும் விதமாக இங்கு தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் குஜராத் முழுவதும் வண்ணமயமாக காணப்படும். இங்கு மக்கள் கலாசார மற்றும் பாரம்பரிய உடையை அணிந்து, நாட்டுப்புற இசையுடன் வட்டமாக நடனமாடுவார்கள். தீமை அழிந்து நன்மை வென்ற மகிழ்ச்சியில் மக்கள் துடிப்புடன் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
டெல்லி
தலைநகர் டெல்லியில் தசரா விழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ராமன், ராவணனை தோற்கடித்து அழித்ததை நினைவுகூரும் வகையில் தசரா விழா நடத்தப்படுகிறது. இங்கு, தசரா விழா ‘ராமலீலா’ என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தசராவின் முந்தைய ஒன்பது நாட்களும் நகரத்தை சுற்றியுள்ள கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு, ராமாயணம் நாடகமாக நடத்தப்படும். 10-வது நாள் டெல்லியின் பல இடங்களில் ராவணனின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து கொண்டாடுவார்கள். குறிப்பாக ராம்லீலா மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு 10 தலையுடன் ராவணனின் உருவப் பொம்மை பிரமாண்டமாக வைக்கப்படும். அதில் பலவிதமான வண்ண பட்டாசுகளை சுற்றி அலங்கரிப்பர். பின்பு தீ பற்ற வைத்த அம்பை பொம்மையின் மீது எய்துவர். அதில் ராவணனின் உருவப்பொம்மை வெடித்து சிதறி வண்ணமயமாக காட்சி அளிக்கும். கூடவே மேகநாதன், கும்பகர்ணன் உருவப் பொம்மைகளையும் எரிப்பர். இதன்மூலம் தீமை அழிக்கப்பட்டு, நல்ல காலம் தொடங்குவதாக நம்பிக்கை.
இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தில், நவராத்திரி விழா முடியும் 10-ம் நாளில் தசரா விழா தொடங்குகிறது. அதாவது விஜயதசமி நாளில் தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. இங்கு தசரா விழாவை ‘குலு தசரா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், மீண்டும் அயோத்தி திரும்புவதை கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. குலு பள்ளத்தாக்கில் உள்ள தால்பூர் மைதானத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. குலு தசராவில் முக்கிய இடம் பிடிப்பது ரத யாத்திரை ஆகும். குலு பகுதி மக்கள் ராமரை, ரகுநாதர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். ஒரு அழகான தேரில் ரகுநாதரின் சிலை வைக்கப்பட்டு, அந்த தேரை மக்கள் இழுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வருவார்கள்.