இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்

இயேசு நம்மை தாழ்ச்சி என்னும் உயரிய பண்பில் வாழ அழைக்கின்றார்.;

Update:2025-12-11 12:04 IST

இயேசுவின் போதனைகளில் முக்கியமான ஒன்று தாழ்ச்சி. பல்வேறு சூழ்நிலையிலும் இந்த தாழ்ச்சியை புரிந்துகொள்ளலாம். அதன் அடிப்படையில், இயேசு போதித்த அந்த தாழ்ச்சியை, நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு அணுகலாம் என புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

ஒருமுறை இயேசுவை ஒருவர் தன் வீட்டிற்கு உணவருந்த அழைத்திருந்தார். அங்கு வந்திருந்த மற்றவர்கள் முதன்மையான இருக்கைக்காகத் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டனர். அதைப் பார்த்த இயேசு, அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்:

“ஒருவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், முதன்மையான இருக்கைகளில் அமராதீர்கள். ஒருவேளை அவர் உங்களைவிட முக்கியமானவரையும் அழைத்திருக்கலாம். அப்பொழுது, உங்களை விருந்துக்கு அழைத்தவர், 'உங்கள் இடத்தை விட்டுக்கொடுங்கள்' எனக்கூறலாம். நீங்கள் கடைசி இருக்கையில் அமருங்கள். அப்போது, உங்களை அழைத்தவர் வந்து, 'நண்பா! முதன்மையான இருக்கைக்கு வாருங்கள்' என அழைப்பார். அப்போது பந்தியில் இருப்பவர்கள் அனைவர் முன்னும் பெருமையடைவீர்கள். மேலும், தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவார், தம்மைத் தாமே உயர்த்துகிறவர் தாழ்த்தப் பெறுவர்' என்றார்”. (லூக் 14:7-11)

மேற்கண்ட பகுதியிலிருந்து, இயேசு நம்மை தாழ்ச்சி என்னும் உயரிய பண்பில் வாழ அழைக்கின்றார் எனத் தெளிவாகத் தெரிகின்றது. தன்னை முதன்மையாக கருதாமல், பிறருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை, இந்த நிகழ்வின் பின்புலத்தில் தாழ்ச்சி எனப் புரிந்துகொள்ளலாம்.

அன்றைய யூத கலாசாரத்தில், பொதுவாக விருந்தளிப்பவரின் வலப்புறம் உயர்ந்த சமூகநிலையில் உள்ள, நேர்மையானவர்களுக்கு வழங்கப்பட்டது. சாதாரண மக்கள், விருந்தளிப்பவரிடம் இருந்துத் தொலைவான இடத்திலேயே அமர்ந்தனர். விருந்தளிப்பவர், தான் ஒருவரை எவ்வாறுப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவருக்கான இடத்தை ஒதுக்குகிறார். இதன் அடிப்படையிலேயே, தங்களுக்கான இடத்தைப் பிடிக்க மக்கள் தங்களுக்குள் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிகழ்வின் பின்னணியில், முதன்மையான இடத்தில் அமரும்போது விருந்துக்கு அழைத்தவர் வந்து, 'உங்கள் இடத்தைவிட்டுக் கொடுங்கள்' என்கிறார். ஆனால், கடைசி இருக்கையில் அமரும்போது, நண்பா! முதன்மையான இருக்கைக்கு வாருங்கள்' என அழைக்கிறார்.

முதன்மையான இடத்தில் இருப்பவர், விருந்தளிப்பவருக்கு தன்னை நெருக்கமானவராக, மற்ற எல்லோரையும் விட உயர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். இறுதி இருக்கையைத் தேர்ந்தெடுப்பவர், தன்னையும் பிறரைப் போல நினைக்கிறார்.

இங்கு தாழ்ச்சி என்பது, உயர்வு மற்றும் தாழ்வைக் குறிப்பதல்ல. மாறாக, ஒருவர் தான் எந்த நிலையில் இருந்தாலும், தான் மற்ற எல்லோருக்கும் இணையானவன், யாருக்கும் உயர்ந்தவன் இல்லை என்பதே தாழ்ச்சியின் ஆழ்ந்த புரிதலாக இருக்க முடியும்.

உளவியல் பின்புலத்தில் பார்க்கும்போது, எவர் ஒருவர் தன்னை பிறருக்கு இணையாகப் பார்க்காமல், உயர்வாய் பார்க்கிறாரோ, அவர் தன் ஆழ்மனதில் பிறரைவிடத் தன்னைத் தாழ்வாய் கருத வாய்ப்பு அதிகம் எனக்கொள்ளலாம். அந்த இடைவெளியை நிரப்பவே, ஒருவர் பிறரைவிட தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ள விரும்புகின்றார் எனவும் புரிந்துகொள்ளலாம்.

ஒருமுறை மதகுருவை திருமண நிகழ்விற்கு அழைத்திருந்தனர். அவர் அந்த திருமண நிகழ்வை தலைமை யேற்று நடத்தினார். திருமணம் முடிந்த பின் அவருக்கென ஒரு தனி இடத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டு, மற்ற எல்லா விருந்தினரும் உணவருந்திய இடத்தில் அமர்ந்து உணவருந்தினார். அதைப் பார்த்த மற்ற விருந்தினர்கள் வியப்படைந்தனர். மணமக்களின் பெற்றோர், அந்த குரு தங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்து இருப்பதாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இங்கு அந்த குரு, தன்னைப் பிறரைவிட உயர்த்திக் கொள்ளவில்லை. ஆனால், தன்னைப் பிறருக்கு இணையானவராகவே பாவித்தார். அவர் தன்னைப் பற்றி தாழ்வாய் எண்ணவில்லை. எனவே, பிறரைவிடத் தன்னை உயர்வாய் காட்டிக்கொள்ளும் தேவை அவருக்கு இருக்கவில்லை.

இயேசு மக்களைத் தாழ்ச்சியோடு இருக்க அழைப்பு விடுக்கிறார். இங்கு தாழ்ச்சி என்பதை, தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளாமல் இருப்பதை மட்டுமல்ல, தன்னைப் பிறருக்கு இணையாகக் கருதுவது எனப் புரிந்து கொள்ளலாம். அன்று யூத கலாசாரத்தின் முக்கிய நிகழ்வான விருந்தில் தன்னை உயர்ந்தவர்களாய் காட்டிக் கொள்ள விரும்பிய மக்களிடம், தாழ்ச்சியோடு இருக்க அழைப்பு விடுத்தார், இயேசு. இன்று நம் கலாசாரத்தில், இந்த காலச் சூழலில் கல்வியறிவு, சமூக பொருளாதார நிலை, பதவி ஆகியவற்றால் உயர்வு தாழ்வு பாராட்டும் நம்மையும் தாழ்ச்சியோடு வாழ அழைக்கிறார்.

-இ.பிரவின் குமார், சென்னை.

Tags:    

மேலும் செய்திகள்