ஆபரேஷன் சிந்து: முதன்முறையாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் சிந்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.;

Update:2025-06-24 12:02 IST

புதுடெல்லி,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டி அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த போரால் அந்த நாடுகளில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அவர்களை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.

இந்த வகையில் இந்தியாவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ந்தேதி டெல்லி வந்தது.இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து அங்கிருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்திய பயணிகள் வந்தனர். கடைசியாக நேற்று முன்தினம் வந்த விமானத்தில் 28 பயணிகள் வந்தார்கள். இவர்களோடு இந்தியா திரும்பிய பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,713 ஆனதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று முன்தினம் இறங்கிய விமானத்தில் வந்த இந்தியர்களை வெளியுறவுத்துறை இணை மந்திரி பவித்ர மார்கெரிட்டா வரவேற்றார். அப்போது அவர், 'ஈரானில் இருந்து மேலும் 3 விமானங்கள் 2 நாட்களில் இந்தியா வரும்' என்றார். இந்தநிலையில், மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 292 இந்தியர்கள் இன்று புதுடெல்லி வந்தடைந்தனர். இதுவரை ஈரானில் இருந்து 2,295 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஈரானுடனான மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம் இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ் முதன்முறையாக இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டு முதல் விமானம் மூலம் 161 பேர் இன்று புதுடெல்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்டுள்ள 161 இந்தியர்களும் சாலை வழியாக இஸ்ரேல்-ஜோர்டான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு நுழைவு இசைவு (விசா) உள்பட பயணம் மேற்கொள்வது தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்த பின்பு அவர்கள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அம்மானில் இருந்து அவர்கள் தாயகம் திரும்புவதற்காக சிறப்பு விமானங்களை செய்யப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் 161 இந்தியர்கள் புதுடெல்லி வந்தடைந்தனர். மீட்கப்பட்ட இந்தியர்களை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்