பீகார்: வந்தே பாரத் ரெயில் மோதி 4 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பாட்னா,
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீகாரின் தலைநகர் பாட்னாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு கோரக்பூரில் இருந்து புறப்பட்டது. ரெயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பீகாரின் பூர்னியா மாவட்டம் ஜக்பனி - கதிஹர் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ரெயில் தண்டவாளத்தை 5 பேர் கடக்க முயன்றனர். அவர்கள் மீது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரெயில் மோதியது. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.