மலேசியாவில் 500 தமிழ் பள்ளிகள்: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வலுவான கலாசார பிணைப்பை ஒடிசி நடனமும், பாவல் இசையும் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி பாராட்டினார்.;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.
பிரதமர் மோடி பேசும்போது, மலேசியாவில் உள்ள நம்முடைய இந்திய சமூகத்தினர் மெச்சத்தக்க பணிகளை மேற்கொள்கின்றனர். மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், தமிழ் மொழியுடன், பிற பாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.
அதனுடன், மற்ற இந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் பஞ்சாபி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதேபோன்று மலேசியாவில் துடிப்பான ஒடிசி நடனம் ஆடப்பட்டது. மற்றும் பாவல் இசை இசைக்கப்பட்டது. இவை இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வலுவான கலாசார பிணைப்பை பிரதிபலிக்கிறது என அவற்றையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
கடந்த மாதம், லால் பாத் சேலை அணிந்து மலேசிய இந்திய பாரம்பரிய சமூகம் தனித்துவ நிகழ்ச்சியை நடத்தியது. இதனை குறிப்பிட்ட பிரதமர் மோடி, வங்காள கலாசாரத்துடன் அந்த சேலை ஒரு சிறப்பு பிணைப்பை கொண்டது என்று கூறினார்.