டெல்லியில் அரசு பஸ்கள் 100 சதவீதம் மின்சார பஸ்களாக மாற்றப்படும்: முதல்-மந்திரி அறிவிப்பு
டெல்லிக்கு 11 ஆயிரம் மின்சார பஸ்களை வாங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன என ரேகா குப்தா கூறினார்.;
புதுடெல்லி,
டெல்லியில் பொது போக்குவரத்துக்கு பயன்படும் அரசு பஸ்கள் 3 ஆண்டுகளில் 100 சதவீதம் மின்சார பஸ்களாக மாற்றப்படும் என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார். டெல்லி சத்ராசல் ஸ்டேடியத்தில் குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசினார்.
அப்போது அவர், டெல்லி அரசு முதலீட்டு செலவினங்களை இரட்டிப்பாக்கியுள்ளது. இதன்படி, ரூ.30 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும். டெல்லியை சிறந்த நகர் ஆக்க, பொது போக்குவரத்துக்கு பயன்படும் அரசு பஸ்களை 3 ஆண்டுகளில் 100 சதவீதம் மின்சார பஸ்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
இதனால், காற்று மாசு ஏற்படாத வகையில் இருக்கும். இதன்படி, 11 ஆயிரம் மின்சார பஸ்களை வாங்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. அவற்றை பராமரிக்க, சார்ஜிங் நிலையங்கள் அமைக்க, புதிய பஸ் டெப்போக்கள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் விரைவாக தயாராகி வருகின்றன என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறினார்.
பா.ஜ.க. டெல்லியில் ஆட்சி அமைத்த நாள் முதல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது என கூறிய அவர், இந்த திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றார்.