பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு; சராசரி 66.80 சதவீதம்

பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.;

Update:2025-11-11 20:04 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற முடிவானது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதன் பின்னர், முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், சூறையாடுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 31. 38 சதவீத வாக்குகள் பதிவாகின. காலையில் இருந்தே வாக்குப்பதிவை செலுத்த மக்கள் ஆர்வமுடன் வந்துகொண்டே இருந்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி 47. 62 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.

தொடர்ந்து 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பீகாரில் 6 மணியளவில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த சூழலில், பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்காளர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு என்ற பரபரப்புக்கு இடையே அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, வாக்குப்பதிவு சற்று அதிகம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்