தானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்

விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-05-23 18:01 GMT

தானே,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது

இதனால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலையில் மூன்று முறை வெடிச் சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். இதன் அதிர்வுகள், 3-4 கிலோ மீட்டருக்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது

மேலும், இந்த தொழிற்சாலையின் அருகில் இருந்த கார் விற்பனையகம் மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்த கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகளும், கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து சிதறியுள்ளன.

இந்த விபத்தில், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 6 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகி இருந்தநிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 60 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பகல் நேர பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "டோம்பிவாலி உள்ள கெமிக்கல் கம்பெனியில் கொதிகலன் வெடித்து சிதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கலெக்டரிடம் ஆலோசித்தேன். இந்த சம்பவத்துக்கு காரணமான தொழிற்சாலையின் 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்