2017 முதல் 2022 வரை இந்தியாவில் பதிவான போக்சோ வழக்குகளில் 94 சதவீதம் அதிகரிப்பு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-16 18:01 IST

புதுடெல்லி,

எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சைல்ட்லைட் குளோபல் சைல்ட் சேஃப்டி இன்ஸ்டிடியூட் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

‘இன்ட்டூ தி லைட் இன்டெக்ஸ் (Into the Light Index) 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 33,210-ல் இருந்து 64,469 ஆக, அதாவது 94 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளதாகவும், இது கடுமையான சட்ட அமலாக்கத்திற்கான குறியீடாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதோடு, தெற்காசிய பிராந்தியத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தரவுகளை பதிவு செய்வதில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும், இது பயனுள்ள கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, 8 குழந்தைகளில் ஒருவர் (12.5 சதவீதம்), அதாவது சுமார் 5.4 கோடி குழந்தைகள் 18 வயதை அடைவதற்கு முன்பே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை உருவாக்கும் செயல் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்