வனப்பகுதியில் ஆண் புலியுடன் சண்டையிட்ட பெண் புலி

கால்நடை டாக்டர்கள் குழுவினர், காயமடைந்த பெண் புலிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.;

Update:2025-08-17 09:13 IST

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்துக்கு உட்பட்ட குந்தகெரே வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரு புலிகள் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. அப்போது ஒரு புலி இன்னொரு புலியை கடித்து குதறியது.

இதில் தலை மற்றும் வாய் பகுதியில் அந்த புலி பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது. இதை சவாரிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சண்டையிட்ட புலியை சவாரி வாகனத்தில் சென்ற வனத்துறையினர் விரட்டினர். இதையடுத்து அந்த புலி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவக்குழுவினருடன் அங்கு விரைந்தனர். அவர்கள் காயத்துடன் கிடந்த புலியை வலை போட்டு பிடித்தனர். பின்னர் அதனை இரும்பு கூண்டில் அடைத்தனர். அதையடுத்து புலி இருந்த இரும்பு கூண்டை ஒரு வாகனத்தில் ஏற்றி மைசூரு அருகே கூர்ஹள்ளியில் உள்ள சாமுண்டி வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு வனத்துறை கால்நடை டாக்டர்கள் குழுவினர், காயமடைந்த புலிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த புலியின் தலை, முன்னங்கால்கள், வாய் பகுதிகளில் பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதற்கு மருந்து போட்டு கட்டுப்போடப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு ரத்தம் வெளியேறி இருந்ததால் அது சோர்வாக இருந்தது. இதனால் அந்த புலிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காயமடைந்தது 8 வயது நிரம்பிய பெண் புலி. அந்த புலி, ஆண் புலியுடன் சண்டையிட்டுள்ளது. இதில் ஆண் புலி தாக்கியதில், பெண் புலி பலத்த காயம் அடைந்துள்ளது. அந்த புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

அந்த புலி குணமடைந்த பிறகு வனப்பகுதியில் விடப்படுமா என வனத்துறையினரிடம் கேட்டதற்கு, அந்த புலி காயம் அடைந்து இருப்பதால், இங்ேகயே வைத்து பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே ஆண் புலியும், பெண் புலியும் சண்டையிட்டதை சவாாி சென்ற சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்