பிரசவத்தின்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

மருத்துவ துறையில் ஏற்பட்ட அரியவகை நிகழ்வு என அரசு மருத்துவமனை டீன் தெரிவித்தார்.;

Update:2025-07-12 21:31 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலிகா குகே (வயது31). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 7-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அம்பாஜோகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கா்ப்பிணியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த 27 வார குறை மாத குழந்தையை எடுத்தனர். குழந்தை 900 கிராம் எடை மட்டுமே இருந்தது.பிரசவத்துக்கு பிறகு குழந்தையின் உடலில் அசைவு எதுவும் இல்லை. குழந்தை அழவும் இல்லை. அந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக அதை பரிசோதித்த டாக்டர் கூறினார். மறுநாள் காலை குழந்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடும்பத்தினர் குழந்தையை அடக்கம் செய்ய வெள்ளை துணியில் போர்த்தி வைத்து இருந்தனர். இந்தநிலையில் குழந்தையின் பாட்டி அதை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என கூறினார். இதையடுத்து குடும்பத்தினர் குழந்தையை பாட்டியிடம் கொடுத்தனர். அப்போது குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை பாட்டி உணர்ந்தார். இதுகுறித்து அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து தாய் உள்பட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் அவர்கள் உடனடியாக குழந்தையை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிசென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைக்கு உயிர் இருப்பதை உறுதி செய்தனர். தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் சங்கர் தபாதே கூறுகையில், "இது மருத்துவ துறையில் ஏற்பட்ட அரியவகை நிகழ்வு. இதில் டாக்டர்களின் கவனக்குறைவு இல்லை" என்றார். மேலும் அரசு ஆஸ்பத்திரி மீது குழந்தையின் பெற்றோரும் புகார் எதுவும் அளிக்கவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்