இறுதிச்சடங்கு முடிந்த பின் ஆற்றில் குளித்த 3 பேர் பலி.. தொடர்கதையாக நிகழ்ந்த உயிரிழப்புகளால் அதிர்ச்சி

மயானத்துக்கு வந்தவர்களில் 7 பேர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆற்றில் மூழ்கினர்.;

Update:2025-09-16 12:41 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சனிக்கிழமை, கார் விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்கள் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்றுவிட்டு ஹரித்துவாரில் இருந்து திரும்பியபோது, இந்த விபத்தில் சிக்கினர். கார் தடுப்புச் சுவரில் மோதி, பள்ளத்தாக்கில் நீரில் மூழ்கியதால் உயிர்ப்பலிகள் நிகழ்ந்தது.

இந்த நிலையில் இறந்த 4 பேரின் இறுதிச் சடங்கு அவர்களின் சொந்த ஊரான பில்வாரா மாவட்டம் புலியா காலா கிராமத்தில் நேற்று நடந்தது. மயானத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்து இறந்தவர்களை எரியூட்டினர். பின்னர், மயானத்துக்கு வந்தவர்களில் 7 பேர் குளிப்பதற்காக அங்குள்ள ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆற்றில் மூழ்கினர்.

அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் உதவியுடன் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்ற 3 பேர் இறந்த நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் பெயர் மகேந்திர மாலி (வயது25), பர்தி சந்த்(34), மகேஷ் சர்மா (35) என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அந்த பகுதி எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்து சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சனிப்பிணம் தனியாகப் போகாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். சனியன்று இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி இறக்க, அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களும் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த கிராம மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்