நடிகை வழக்கு: சீமானுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
சீமான் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை என்று நடிகை தரப்பில் வாதிடப்பட்டது.;
புதுடெல்லி,
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் (சீமான், விஜயலட்சுமி) பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இந்த வழக்கில், நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமான் மீது விதிக்கப்பட்டிருந்த கைதுத் தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமி தரப்பு முன்வைத்த வாதத்தில், “சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக் கொண்டு செல்வது? ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இருவரும் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர்.