அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்: சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள்.;

Update:2025-05-19 15:55 IST

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதில் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன என கூறி, அது மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நீதிபதிகள் ஓய்வு பெறும்போது, அவர்கள் நிரந்தர அல்லது கூடுதல் நீதிபதிகள் என்ற அளவில் வேற்றுமை காணப்படுகின்றன.

இதேபோன்று, மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதியானவர்களுக்கு, பார் மூலம் நேரடியாக ஐகோர்ட்டு நீதிபதியானவர்களை விட குறைவான ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகிறது என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசீ தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதி அமர்வு கூறும்போது, கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களை பெற தகுதியானவர்கள் என இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவில் தெரிவித்து உள்ளது.

அவர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் கூடுதல் நீதிபதிகளாக ஓய்வு பெற்றனரா? அல்லது பிற்காலத்தில் நிரந்தரம் செய்யப்பட்டனரா? என்றில்லாமல் அனைவருக்கும் முழு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனை மறுப்பது என்பது, அரசியல் சாசனத்தின் பிரிவு 14-ன் கீழ் அனைவருக்கும் உள்ள உரிமையை மீறும் செயலாகும்.

பணி நியமன காலம் அல்லது அவர்களுடைய பதவி அடிப்படையில் நீதிபதிகளிடையே வேற்றுமை பார்ப்பது என்பது இந்த அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என அந்த அமர்வு தெரிவித்து உள்ளது. இதனால், பார் மற்றும் மாவட்ட நீதிமன்றம் என எந்த நிலையில் இருந்து நீதிபதிகளானாலும் அவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள். எனினும் விரிவான தீர்ப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. தீர்ப்பு ஜனவரி 28-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்