கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.;
கோழிக்கோடு,
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் பாதித்து கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையே திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது நபர் கடும் காய்ச்சல், தலை வலி போன்ற அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்ைச பலனின்றி அந்த நபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்தார்.
அவர் பணிபுரிந்து வந்த ஓட்டலில், உடன் பணிபுரிந்த கோட்டயத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டலில் இறந்து கிடந்தார். அவர் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இறந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. இதையடுத்து அந்த ஓட்டலை கோழிக்கோடு மாநகராட்சி மூடியது. மேலும் ஓட்டல் அருகே உள்ள கிணற்றில் இருந்து நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 10 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் இந்த நோய் அறிகுறிகளுடன் .அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவ பரிசோதனை முடிவில், சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இதன் மூலம் தற்போது 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.