ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு - சோதனை வெற்றி
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணை நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.;
முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை செய்து வருகிறது. பல கட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும். அந்த வகையில், இடி-எல்டிஎச்சிஎம் ஹைபர்சோனிக் ஏவுகணை நேற்று முன் தினம் சோதித்து பார்க்கப்பட்டது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
இந்த நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த ஆகாஷ் பிரைம் சோதனை லடாக்கில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
சோதனையின் போது இலக்குகளை துல்லியமாக ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும், சவாலான தட்பவெப்ப நிலையிலும் திறம்பட செயல்படும் வகையில் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும் மற்றும் சுமார் 25-30 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது.