விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா வருகை
சுபான்ஷு சுக்லா கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. 39 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவருடன் மேலும் 3 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்னும் தனியார் நிறுவனம், 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசாவுடன் இணைந்து செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வுப்பணிக்காக இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் தேர்வானார்கள்.
இந்த விண்வெளி ஆய்வுக்குழுவினர், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் இணைக்கப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 25-ந்தேதி விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பின்னர், 26-ந்தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை டிராகன் விண்கலம் அடைந்தது.
இதையடுத்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் ஜூலை 15-ந்தேதி, ஆக்சியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற டிராகன் விண்கலம், சான்டியாகோ கடற்கரை அருகே பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக இறங்கியது. இதன் மூலம் இந்த ஆய்வுப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சுபான்ஷு சுக்லாவின் இந்த விண்வெளி பயணமானது, இந்தியாவின் சொந்த மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், சுபான்ஷு சுக்லா கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், இந்தியாவின் விண்வெளி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதில் குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்துள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.
இந்த நிலையில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். இன்று மாலை இந்தியாவிற்கு வரும் சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார் எனவும், ஆகஸ்ட் 23-ந்தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் சுபான்ஷு சுக்லா கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.