பெங்களூரு: மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் மாரடைப்பால் பெண் போலீஸ் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-07-18 21:42 IST

பெங்களூரு,

கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்கலாம் என பலர் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் சிஞ்சோலியை அடுத்த கொஞ்சாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (வயது 28), பெண் போலீசான இவர் பீதர் புறநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் பீதரில் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சரிதாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சரிதா ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை பிறந்த ஒருவாரத்தில் பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா காலலேகொண்டா கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் டிரைவரான பக்ரேஷ் மல்லேசப்பா (25) என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏற்றி செல்லும் போது அவருக்கு நெஞ்சவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பக்ரேஷ் உயிரை விட்டது தெரியவந்தது. டிரைவர் பக்ரேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் பள்ளி மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்