பீகார் தேர்தல்: 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது.;

Update:2025-10-14 15:41 IST

பாட்னா,

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 121 தொகுதிகளில் 17-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. எனவே, அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு வேகம் எடுத்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று கடந்த 12-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும். லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கு 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்-மந்திரி விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்